மெய்ப்பொருள்
மெய்ப்பொருள்
மெய்ஞானம் என்பது உண்மை ஞானம். நித்திய ஞானம். அனைத்தையும் அறியக்கூடிய அறிவு, இறைவனை உணரக்கூடிய அறிவு போன்ற பல்வேறு பெயர்களை நாம் கூற இயலும்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் இந்த மெய்ஞானத்தை உள்ளபடி அறிந்து கொள்வது என்பது கடினமான ஒன்று .ஏனென்றால் இந்த மெய்ஞானம் உணர்ந்த குருமார்கள் இக்கால கட்டத்தில் அறிவது மிகவும் கடினம்.
இருப்பினும் அதனை அடைய முயற்சி செய்து கொண்டே இருப்பது நமது கடமை.நம்முடைய முன்னோர்கள், சித்தர்கள், ஞானிகள் அனைவரும் மெய்ஞானத்தை பற்றி நிறைய விஷயங்களை கூறியுள்ளனர்.
இதனை எவ்வாறு அடையலாம் அதாவது இறைவனை அடையக்கூடிய பல்வேறு மார்க்கங்களை ஞானிகள், சித்தர்கள் பல்வேறு விதங்களில் கூறியுள்ளனர். ஆனால் அவற்றை நாம் கடைப்பிடிப்பதும் இல்லை, அது சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபடுவதும் இல்லை. சிந்திக்காமல் மெய்ஞானம் சித்திக்காது.
மெய்யறிவு
மெய்யறிவு என்பது எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அந்த இறைவனை அடையக்கூடிய அறிவு. இதுவே உண்மை அறிவு மற்ற எந்த அறிவும் நமக்கு உதவாது. மெய்யறிவு மட்டுமே நமது மரணத்தை வென்று நித்தியமாக வாழ வழி செய்யும். அதாவது மெய்ப்பொருளை உணர்ந்து சதா சர்வ காலம் அந்த பேரின்பத்தில் இருக்க செய்வதே இந்த மெய்யறிவு.
மெய்ப்பொருள்
மெய்ப்பொருள் என்பது முடிவான பொருள், என்றும் அழியாத பொருள், எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பொருள்.அதுவே இறைசக்தி ,பரம்பொருள். இந்த மெய்ப்பொருள் சார்ந்த விஷயங்களை எல்லா ஞானிகளும், சித்தர்களும் பல்வேறு விதமாக வெவ்வேறு காலகட்டத்தில் உணர்த்தியுள்ளனர்.
திருமூலர், ஒளவையார், திருவள்ளுவர், வள்ளலார் போன்ற சித்தர்கள் இந்த மெய்ப்பொருளை பற்றி தெளிவாக கூறியுள்ளனர். அதற்கு பரிபாஷையில் வெவ்வேறு பெயர்களை சொல்லியும் உள்ளனர். எந்த ஒரு பொருளையும், என்றும் அழியாத ஒரு நித்திய நிலைக்கு கொண்டு செல்லக்கூடிய தன்மை அந்த மெய்பொருளுக்கே உண்டு.
அப்படிப்பட்ட பொருள் நம் உடலில் எங்கு எங்கு உள்ளது என்பதை வள்ளல் பெருமான் தெளிவாக சொல்லி உள்ளார். அகம், அகப்புறம், புறம், புறப்படும் போன்ற 4 இடங்களில் மெய்ப்பொருள் அதாவது இறைவன் விளங்கக்கூடிய இடமாக சொல்லி உள்ளார். அவ்வையார் தனது விநாயகர் அகவலில் முழுவதும் இந்த மெய்ப்பொருளை பற்றியே கூறியுள்ளார்.
மாணிக்கவாசகரின் திருவாசகத்திலும் மெய்பொருள் பற்றி தெளிவாக கூறியுள்ளார் . அதை வரும் பதிவுகளில் நாம் ஒவ்வொன்றாக காணலாம். இந்த மெய்ப்பொருளுக்கு வெவ்வேறு பெயர்களை அனைத்து சித்தர் பெருமக்களும் கூறியுள்ளனர்.
இதனை பரிபாஷையாக எட்டு-இரண்டு, சூரியன்-சந்திரன், இடகலை-பிங்கலை, நாதம்-விந்து என்றவாறு கூறியுள்ளனர். இது அவரவர் அனுபவத்திற்கு ஏற்றவாறும், அவரவர் ஆன்மிகத்தில் அடையும் நிலைக்கு ஏற்றவாறும் மாறுபடக்கூடும்.
மெய்பொருள் விளக்கம்
வள்ளலார் கூறும் மெய்பொருள் விளக்கம்
கண்ணே கண்மணியே கருத்தே கருத்தின் கனிவே
விண்ணே விண்ணிறைவே – சிவமே தனி மெய்ப்பொருளே
நமது கண்களிலுள்ள கண்மணிகளே உண்மையான மெய்பொருள். உணர்வை இவைகளில் வைத்து நாம் தவம் செய்யும்போது நமது மாயா திரைகள் ஒவ்வொன்றாக விலகும்.
தமிழில் காக்கும் கடவுளான விஷ்ணு பகவானை, கண்ணன் என்று அழைக்கிறோம். ஆனால் இந்த பெயர் இருந்தும் நம்மில் பெரும்பாலானோர் ஏன் இந்த பெயர் வந்தது என்று யோசிப்பதில்லை. கண்ணன் என்றால் கண்களுக்கு அதிபதி, கண்ணன் வாயை திறந்தால் உலகமே அதில் தெரியும் என்பது புராணம்.
ஆனால் நம் கண்மணி தவத்தால் திறக்கும் போது அண்டா சராசரங்களையும் காண முடியும் என்பது நம்மில் பல பேருக்கு தெரியாது.
ஒளவையார் கூறும் மெய்ப்பொருள் விளக்கம்
விநாயகர் அகவல் (முதல் சில வரிகள் மட்டும்)
“சீதக் களப செந்தாமரை பூம்
பாத சிலம்பு பல்லிசை பாட”
சீதம் என்றால் குளுமை அல்லது குளிர்ச்சி என்று பொருள். களபம் என்றால் அரைக்கப்பட்ட சந்தனம். பொதுவாக சந்தன மரம் தனக்கு தேவையான சத்தை வேறொரு மரத்திலிருந்து எடுத்துக் கொள்ளும். அது போல் நம் உடலில் சேர்க்கப்பட்ட சத்துக்கள் அனைத்தையும் சிகப்பு நிற நாடி வழியாக கண்களை அடைகின்றன.
இந்த நாடி தாமரை தண்டு போன்று அமைந்திருக்கும். அதையே செந்தாமரை எனக் கூறியுள்ளனர். ஒளி செல்லக்கூடிய வழியாக கண்கள் விளங்குகின்றன. அதுவே பரை, ஓசை போன்றவற்றை கொண்டுள்ளது. பாதம் என்றால் இறைவனின் திருவடியான நமது கண்களையே குறிக்கின்றன.
நக்கீரர் இதனை கீழ்கண்ட பாடலில் கூறியுள்ளார்.
பன்னிரு கரத்தாய் போற்றி
கண்ணில் இருக்கும் மாமணியே போற்றி
என குறிப்பிட்டுள்ளார்.
மேற்கண்ட பாடல்கள் மூலமாக நமக்கு தெளிவாக தெரிவது நம் கண்மணிகளே மெய்ப்பொருளாகும். இதனை யாரும் வெளிப்படையாக கூறுவதில்லை.
மெய்பொருள் சாதனை
நமக்கு இப்பொழுது மெய்ப்பொருள் என்ன என்பதை தெரிந்து விட்டது. ஆனால் எவ்வாறு தவம் செய்வது. இதற்கும் வள்ளல் பெருமான் வழிமுறைகளை சொல்லியுள்ளார். அதாவது உணர்வினை எப்பொழுதும் வலது கலையிலே செலுத்துக என்றார்.
அதாவது உங்களுடைய உணர்வை எப்பொழுதும் வலது கண்மணியின் மையப் பகுதியில் வைக்கும் போது உங்களுடைய சுவாசம் வலது நாசியில், அதாவது சூரிய கலையின் இருக்கும்.தொடர்ந்து நமது சுவாசம் சூரிய கலையில் செல்லும்போது நமக்கு உடலில் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி உடல் நீண்ட ஆயுளோடு இருக்கும்.
இது ஆரம்பத்தில் நாம் செய்யக்கூடிய ஒரு விதமான யோக முறை. அடுத்து இந்த தவ முறையை நாம் தொடர்ந்து குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு ஜாமம் நேரம் அதாவது 3 மணி நேரம் செய்யும்போது நமது உடலில் ஒரு விதமான சுத்த உஷ்ணம் உருவாகும்.
அந்த உஷ்ணம் உருவாக உருவாக நமது உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் நீங்கி நமது உடல் வெவ்வேறு மாற்றங்கள் அடையும். இதனை அனுபவ ரீதியாக அன்பர்கள் தெரிந்து கொள்ளலாம்.
மெய்ப்பொருள் தவத்தை ஒருவர் தொடங்குவதற்கு, முன் வள்ளல் பெருமான் கூறிய நித்திய ஒழுக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும். எண்ணம், சொல், செயல் இவை அனைத்திலும் ஒழுக்க நெறியை கடைப்பிடிக்கவேண்டும். முடிந்தவரை மற்ற ஜீவராசிகளுக்கு உதவி செய்தல் வேண்டும்.
வெறும் தவம் செய்வதால் மட்டும் மேல்நிலை அடைய முடியும் என்பது இயலாத காரியம். ஓரளவு பலன் தந்தாலும் முடிவான நிலையை அடைவது என்பது சாத்திய மற்றது.
வள்ளல் பெருமான் கடைசி நிலையில் இருக்கும்போது அவரை ஏரா நிலைக்கு ஏற்றியது தயவு என்று கூறியுள்ளார். என்னதான் தவநிலையில் மேல்நிலைக்கு சென்றாலும் கருணை, தயவு, அன்பு இது போன்ற விஷயங்கள் இல்லாமல் இருப்பதால் எந்தவித பிரயோஜனமும் இருக்காது. இதை நண்பர்கள் யாவரும் தெரிந்து அதனை கடைபிடித்தால் நல்ல பலனை அடைய முடியும்.
அதேபோல் அன்னதானம் செய்தால் மட்டும் போதும் மற்றவை எதுவும் செய்ய தேவையில்லை என்பதும், தவம் செய்தாலும் தயவு,கருணை, அன்பு போன்றவை இல்லாமல் இருந்தாலும், நமக்கு நல்ல நிலையை அடைவது என்பது இயலாத காரியம்.
புலால் உணவை அறவே தவித்து சாத்வீக உணவை எடுத்துக் கொள்வதே உடலுக்கும், மனதுக்கும் நன்மை பயக்கும். தவம் செய்து கொண்டே தயவோடு இருப்பதால் மட்டுமே நாம் இறைவன் அருளால் மேல் நிலைக்கு செல்ல இயலும்.
Leave a Reply